Thursday 26 January 2012

தமிழ்ச் சமூக, பொருளாதார, வரலாற்று ஆய்விற்கான கலந்தாய்வு கூட்டம்




தமிழ்ச் சமூக, பொருளாதார, வரலாற்று  ஆய்விற்கான கலந்தாய்வு கூட்டம்

நாள் : 28 - 01 - 2012
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 3.00 மணி வரை
இடம் : BEFI அரங்கம், காமராஜர் அரங்கம் எதிரில்,
             தேனாம்பேட்டை, சென்னை.
மதிப்பிற்குரிய தோழர்களுக்கு வணக்கம்!

      சென்னை அரசியல் பள்ளி தமிழ்நாடு,  தமிழ்ச் சமூகத்துடன் தொடர்புடைய தத்துவம், கோட்பாடு, அரசியல், பொருளாதாரம், சாதி, பால், இனம், மதம், தேசம் குறித்து உரையாடி வருகிறது. ஒத்த அதேசமயம் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட தோழர்களால் இப்பள்ளி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் நோக்கம் தமிழ்நாடு, தமிழ்ச் சமூகத்துடன் தொடர்புடைய பொருண்மைகள் குறித்து விளங்கிக் கொள்ளுதல், விளக்குதல் என்பதாகவே உள்ளன.

     விளங்கிக் கொள்ளுதல், விளக்குதல் என்பதற்கான பணியை பள்ளி வகுப்புகள், கலந்துரையாடல், கருத்தரங்குகள், களஆய்வுகள், ஆளுமைகளைப் பதிவு செய்தல் என்ற நடைமுறையின் வாயிலாக நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறது.

     தமிழ்நாட்டில் நிலவும் மெய்நிலைகளை அதன் வரலாற்றை விளங்கிக் கொள்ளுவதற்காகவும், விளக்குவதற்காகவும் அதன் வர்க்க சாதிய, இன, மத, தேசிய, பாலின தன்மைகள் குறித்தும், அது நான்கு நிலைகளில் [பகுதி (நிலம் மற்றும் சமூக அடிப்படையில்) தமிழ்நாடு, இந்திய, சர்வதேச] எவ்வாறு செயல்படுகிறது, அதன் தனித்தன்மைகள் மற்றும் உறவுகள் குறித்தும் எங்கள் உரையாடலில், புரிதலில் கவனத்தில் கொண்டுள்ளோம்.

     தமிழ்நாட்டில் நிலவும் மெய்நிலைகளை அதன் வரலாற்றை அதில் நிலவும், நிலவிய முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுதல், விளக்குதல் வாயிலாகவே இங்கு மக்களாலும் பல்வேறு வகைப்பட்ட இயக்கங்களாலும் முன்னெடுக்கப் பட்டு வரும் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தை முன் நகர்த்துவதற்கான முதன்மையான கருத்தியல் பணி நிறைவு பெறும்.

     தமிழ்நாட்டில் நிலவும் மெய்நிலைகளை அதன் வரலாறு, எதிர்கால வாய்ப்புகள் அதன் உறவுமுரண்களை நான்கு நிலைகளில் பார்க்காமல், கருத்து நிலையில் இருந்து தொடங்குதல், ஒரே நிலையில் இருந்து பார்ப்பது ( மரத்தை மட்டும் பார்ப்பது, முழுகாட்டை பார்க்காமல் இருப்பது அல்லது காட்டை மேலோட்டமாகப் பார்ப்பது, மரங்களைப் பார்க்காமல் இருப்பது, மெய் நிலைகளை மட்டும் பார்ப்பது அதன் வரலாறு, எதிர்கால வாய்ப்புகளை பார்க்காமல் இருப்பது அல்லது வரலாற்றை மற்றும் பார்ப்பது அதன் மெய்நிலைமைகளையும், எதிர்கால வாய்ப்புகளையும் பார்க்காமல் இருப்பது ) நம் நிலையில் ஒரு அடி கூட முன்நகர்த்த உதவாததோடு, நம்மை வீழ்த்தவும் செய்யும்.

     தமிழ்நாட்டின் மெய் நிலைகள் அதன் வரலாறு குறித்த முழுமையான பொருண்மை வகைப்பட்ட சமூக, பொருளாதார, வரலாற்று  ஆய்வே  தமிழ்நாடு, அதன் மக்கள் வரலாற்றை எழுதுவதற்கும் ஒடுக்குமுறை சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை முன்நகர்த்துவதற்கான கருத்தியலையும் கோட்பாட்டையும் உருவாக்குவதற்கும் விடுதலைக்கான திட்டம் மற்றும் செயல்திட்ட உருவாக்கத்திற்கும் இங்கு நடைபெற்று வரும் கருத்து முரண்பாடுகளை தீர்க்கவும், பல்வேறு குழுக்களாக சிதறிக் கிடக்கும் மக்கள் இயக்கங்களை ஓரணியில் திரட்டுவதற்கும் உதவி செய்யும். இத்தகைய நோக்கங்களை நிறைவு செய்வதற்காகவே இக்கருத்தோடு உடன்பாடு கொண்டவர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு குறித்த முழுமையான சமூக, பொருளாதார, வரலாற்று  ஆய்வை முன்னெடுக்க விரும்புகிறோம்.

     சமூக, பொருளாதார, வரலாற்று  ஆய்வை முன்னெடுப்பதற்கான தற்போதைய வடிவமாக தமிழ்நாட்டின்  மெய்நிலைமைகள் மற்றும் வரலாறு குறித்த வெள்ளை அறிக்கைகளை தயாரித்து, தொகுத்து, மக்கள் முன் வைக்கவும், இந்நிலையில் இருந்து கருத்து போராட்டத்தை முன்னெடுக்கவும் விரும்புகிறோம்.

     எங்களின் இக்கருத்துகளை ஆதரிக்கும் தோழர்களையும், நண்பர்களையும் எங்களோடு இணைந்து இப்பணியை முன்னெடுக்க அழைக்கிறோம். அதேபோல் எங்களின் நிலை குறித்த தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் முன் வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

     அதேபோல் இக்கருத்துகளை ஆதரிக்கும் தோழர்களை எங்களின் கலந்தாய்வு கூட்டத்திற்கு அன்போடு அழைக்கிறோம். இக்கூட்டத்தில் நிலம் நீர், மின்சாரம், கனிம வளங்கள் குறித்த ஆய்விற்கான கருத்துக்களையும், கேள்விகளையும் தோழர்கள் முன்வைப்பார்கள். இது குறித்து உங்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்.


அன்புடன்,
சென்னை அரசியல் பள்ளி

தொடர்புக்கு
98408 78819